இதயத் துடிப்பை சீராக்கும் பொட்டாசியம் - தினசரி வாழைப்பழம் சாப்பிட்டால் போதுமா?
பொட்டாசியம் என்ற உடனேயே, பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பழம் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு வாழைப்பழத்தால் மட்டும் உங்கள் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்க முடியாது.
பொட்டாசியம் என்றால் என்ன?
உடல் இயல்பாக செயல்படுவதற்கு தேவையான முக்கியமான கனிமம் பொட்டாசியம். இது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.சிறுநீரகங்கள் அதிக சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது, செல்கள் சரியாக செயல்பட உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
"பொட்டாசியம் என்பது நுண்ணூட்டச்சத்து மிக்க கனிமம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் இது, உடலில் இருந்து கழிவுகளை அகற்றவும் உதவுகிறது"என்று எஸ்ஏபி டயட் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் மூத்த ஆலோசகர் உணவியல் நிபுணர் டாக்டர் அதிதி சர்மா கூறுகிறார்.
"பொட்டாசியம் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துகிறது. இது நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் ஒரு எலக்ட்ரோலைட். இது இதயம், மூளை மற்றும் உடலின் ஒவ்வொரு தசையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது" என்று எய்ம்ஸின் முன்னாள் உணவியல் நிபுணரும், ஒன் டயட் டுடேவின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால் கூறுகிறார்.
தசை செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிக முக்கியமானது என்று அவர் விளக்குகிறார். இது தசைகள் சுருங்கவும் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. மேலும் , நமது உடலின் pH ஐ சமப்படுத்தவும் உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை அகற்றவும் உதவுகிறது.
பொட்டாசியத்தின் தேவை
தினமும் சராசரியாக 3,500 மில்லிகிராம் பொட்டாசியத்தை உட்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது.
உணவில் இருந்து பொட்டாசியம் கிடைக்குமா?
ஆம், உணவில் போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகள் இருந்தால் பொட்டாசியம் எளிதில் கிடைக்கும்.
ஆனால் பிரச்னை என்னவென்றால், பெரும்பாலான மக்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் கூட பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக சாப்பிடுவதில்லை.
அவர்களின் கலோரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து வருகின்றன.
பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 10 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும் தினசரி பொட்டாசியம் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என அறியப்படுகிறது.
பொட்டாசியம் குறைபாட்டின் விளைவுகள் என்ன?
பொதுவாக, பொட்டாசியம் குறைபாடு உணவுமுறையால் மட்டும் ஏற்படுவதில்லை.
சில நேரங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சில மருந்துகளின் பின்விளைவு அல்லது அதிகப்படியான மது அருந்துவதன் காரணமாக ஏற்படுகிறது.
பொட்டாசியம் குறைபாடு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.
"பொட்டாசியம் குறைபாடு தசை பிடிப்பு மற்றும் பதற்றத்தை அதிகரிக்கிறது. உடல் சோர்வாகவே இருக்கும். இது மலச்சிக்கலையும் ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக, பொட்டாசியம் குறைபாடு ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். அதேபோல் இது ரத்த அழுத்தத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று மருத்துவர் அனு அகர்வால் கூறுகிறார்.
பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன ?
பொதுவாக, சிறுநீரகங்கள் சிறுநீரின் வழியாக அதிகப்படியான பொட்டாசியத்தை அகற்றும், ஆனால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த செயல்முறை சரியாக நடக்காது.
அது போன்ற சூழ்நிலையில், உடலில் பொட்டாசியம் சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக இதயத் துடிப்பு சீரற்றதாகி, இதயம் செயலிழப்பதற்கான அபாயம் அதிகரிக்கிறது.
இதனால் தான், சிறுநீரக நோயாளிகள் பெரும்பாலும் பொட்டாசியம் குறைந்த உணவை உண்ணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொட்டாசியம் குறைபாடு, இதயம், நரம்புகள் மற்றும் தசைகளைப் பாதிக்கிறது, ஆனால் பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதும் ஆபத்தானது என்று விளக்குகிறார் மருத்துவர் அதிதி சர்மா.
பொட்டாசியத்தின் அளவு அதிகரித்தால் இதயம் செயலிழக்கலாம். எனவே, அதை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்
வாழைப்பழங்கள் பொட்டாசியத்தை வழங்குகின்றன, ஆனால் அவற்றை மிகச் சிறந்த அல்லது அதிக அளவில் பொட்டாசியம் தரும் உணவு என வகைப்படுத்த முடியாது.
ஒரு வாழைப்பழம், ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியத்தில் சுமார் 10% மட்டுமே வழங்கும். ஆனால் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கு 30% வரை வழங்கும் திறன் கொண்டது.
அதிகளவு பொட்டாசியம் உள்ள உணவுப் பொருட்கள்
- உலர்ந்த பழங்கள்
- பச்சை இலை காய்கறிகள்
- நட்ஸ் மற்றும் விதைகள்
- பால் மற்றும் தயிர்
- பருப்பு வகைகள்
- மீன்
பொட்டாசியம் சமநிலையை பராமரிக்க, முடிந்தவரை அதிக அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் அனு அகர்வால்.
பொட்டாசியம், தேங்காய் நீர், ஆரஞ்சு, வாழைப்பழம், பீட்ரூட் மற்றும் பச்சை இலை காய்கறிகளில் எளிதாகக் கிடைக்கிறது. இது பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் காணப்படுகிறது.
சப்ளிமெண்ட்ஸ் மற்றும் பொட்டாசியம்
பெரும்பாலான மக்களுக்கு, 3,700 மி.கி அல்லது அதற்கும் குறைவான பொட்டாசியம் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
ஆனால் வயதானவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவற்றை (உப்பு மாற்றுகள் உட்பட) எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஏனென்றால், அவர்களின் சிறுநீரகங்களால் அதிகப்படியான பொட்டாசியத்தை எளிதில் அகற்ற முடியாது.
மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் ஆலோசிக்காமல் அதிகப்படியான வைட்டமின் டி உட்கொள்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர் அதிதி சர்மா அறிவுறுத்துகிறார்.
ஒருவர் தினமும் பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டால், அவர்களுக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கிறது.
எனவே கூடுதலாக சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவேண்டிய அவசியமில்லை.
பானங்களில் பொட்டாசியம் இருக்க வேண்டுமா ?
வியர்வையின் மூலம் சிறிதளவு பொட்டாசியம் வெளியேறுகிறது. எனவே உடற்பயிற்சிக்குப் பிறகு அதை நிரப்ப வேண்டும். அதற்கு இயற்கையான வழிகளைப் பின்பற்றலாம்.
தக்காளி ஜூஸ் குடிக்கலாம், ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸில் சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது.
தோல் நீக்கப்பட்ட வேகவைத்த உருளைக்கிழங்கும் ஒரு நல்ல வழி. அவை பொட்டாசியத்தை வழங்குவது மட்டுமல்லாமல், அவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளும் ஆற்றலை மீட்டெடுக்கின்றன.
பொட்டாசியத்தை அதிகரிக்க எளிதான வழிகள்
- தினமும் ஐந்து முறை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள் (எ.கா., காலை உணவில் ஒரு பழம், மதிய உணவுடன் ஒரு பழம் மற்றும் ஒரு காய்கறி, இரவு உணவில் இரண்டு காய்கறிகள்).
- தினமும் மூன்று பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் (பாலுடன் காபி, சாலட்டில் சீஸ் அல்லது தயிர்)
- வாரம் ஒரு முறை பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் சாப்பிடுங்கள்.
- சிற்றுண்டிகளுக்கு உலர்ந்த பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- மதிய உணவு அல்லது இரவு உணவோடு சாலட் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பச்சை காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். அதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது.
No comments