முதலீட்டாளர்களே உஷார்.. தங்கம் விலை மேலும் சரியும்.. அடுத்த இலக்கு எவ்வளவு? சிட்டிகுரூப் கணிப்பு.!!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து, முன்னணி ஆய்வு நிறுவனமான சிட்டிகுரூப் (Citigroup), அடுத்த சில மாதங்களுக்கான தங்கத்தின் இலக்கு விலையை அதிரடியாக குறைத்துள்ளது. உலகளாவிய வர்த்தகப் பதட்டங்கள் தணிந்து வருவதால், தங்கத்தின் தேவை குறைந்து விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தங்கச் சந்தை திடீரென சரிந்தது ஏன்..?: தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டாலருக்கு கீழே குறைந்தது. இதற்கு முக்கியக் காரணம், அமெரிக்கா - சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம்தான் என்று சொல்லப்படுகிறது. உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும்போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாக தங்கம் மீது முதலீடு செய்வது வழக்கம். ஆனால், வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கைகள் அதிகரித்ததால், தங்கத்தின் மீதான ஆர்வம் குறையத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மட்டுமல்லாமல், இந்தியா, பிரேசில், மலேசியா போன்ற நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதும், சீன அதிபரும் அதற்குத் தயாராக இருப்பதும் வரும் நாட்களில் தங்கத்தின் விலையை மேலும் குறைக்கும் என்று சிட்டிகுரூப் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அத்துடன், அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வரும் சாத்தியக்கூறுகளும் தங்கத்தில் பங்களிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
தஙத்தின் இலக்கு விலையை குறைத்த சிட்டி குரூப் : இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சிட்டி குரூப் தனது 3 மாத தங்க இலக்கு விலையை ஒரு அவுன்ஸுக்கு 4,000 டாலரில் இருந்து 3,800 டாலராக குறைத்துள்ளது. இதேபோல், வெள்ளியின் இலக்கு விலையையும் 55 அமெரிக்க டாலரில் இருந்து 42 டாலராக குறைத்துள்ளது. தங்கத்தின் அடுத்த முக்கிய ஆதரவு நிலை, அதன் 100 நாள் சராசரியான 3,600 டாலராக இருக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 2,700 டாலராக ஆக இருந்த தங்கத்தின் விலை, சர்வதேச பதட்டங்கள் காரணமாக கடந்த வாரம் 4,380 டாலர் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை : தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தபோது முதலீட்டாளர்கள் சுமார் 17 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளதாகவும், இந்த லாபத்தில் 2% மட்டுமே முதலீட்டாளர்கள் விற்றால் கூட, அது ஓராண்டின் மொத்த உலக தங்கச் சுரங்க உற்பத்தியைவிட இருமடங்காக இருக்கும். இந்த அளவு தங்கம் சந்தைக்கு வந்தால், ஆண்டின் இறுதியில் விலை மேலும் சரியக்கூடும் என்று சிட்டிகுரூப் எச்சரித்துள்ளது.
சமீப காலமாக மத்திய வங்கிகளின் தங்க கொள்முதலும் குறைந்துள்ளதால், வர்த்தகர்கள் விலை சரிவை வரவேற்கக்கூடும் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வர்த்தகப் பதட்டங்கள் தணிந்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து வெளியேறும் அளவு, மிக அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments