ஆர்டிஇ சேர்க்கை.. தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பினால் எழுந்துள்ள பெரிய சிக்கல்.. எஸ்டிபிஐ கோரிக்கை:
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "2009-இல் இயற்றப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) மூலம், தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இணையதள விண்ணப்ப முறையின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை இலவச கல்வி பெறுகின்றனர். ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைகின்றனர்.
ஆனால், மத்திய அரசின் நிதி தாமதம் காரணமாக 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டு, பெற்றோர்கள் ஏமாற்றமடைந்தனர். சென்னை உயர்நீதிமன்றம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை புதிய கல்விக் கொள்கையுடன் இணைக்கக் கூடாது எனவும், நிதி வழங்க பொதுநல வழக்கின் அடிப்படையில் உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய அரசு நிதியை விடுவிக்க, தமிழ்நாடு அரசு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது.
இருப்பினும், அக்டோபர் 6 முதல் தொடங்கிய சேர்க்கைக்கு பெற்றோர்கள் நேரடியாக இணையத்தில் விண்ணப்பிக்க முடியாது, அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் அறிவிப்பின்படி இந்த கல்வி ஆண்டில் வகுப்புகள் தொடங்கிய நிலையில், ஏற்கனவே பள்ளிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களில் இருந்து 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பத்தின் அடிப்படையில் தகுதியுள்ள மாணவர்களைத் தேர்வு செய்து பட்டியல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்கவும், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் செலுத்திய பள்ளிக் கட்டணத்தை 7 நாட்களுக்குள் திரும்ப வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்டிஇ சட்டத்தில் 6 மாதங்கள் வரை மாணவர்களைச் சேர்க்கலாம் என்ற நிலை உள்ளது. அதுவரை தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை வைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த இடங்கள் ஏற்கனவே பொது மாணவர்களால் நிரப்பப்பட்டுவிட்டது. இப்போது, அந்த மாணவர்களில் இருந்து மட்டுமே 25 சதவீத இடங்களை தகுதியுள்ள மாணவர்களை விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தகுதியான பல ஏழை மாணவர்களே பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை ஏழை மாணவர்களுக்கு எதிரானது மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு புறம்பானது. இந்த நடவடிக்கையால், ஆர்டிஇ சேர்க்கைக்காக காத்திருந்த ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு புறம்பான இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடைபெற்றது போன்று, இணையதளம் வழியாக பெற்றோர்களே விண்ணப்பிக்கும் வகையில் சேர்க்கை நடைபெற வேண்டும். மேலும், மாணவர்கள் சேர்க்கை ஏற்கனவே நடைபெற்றுவிட்டதால், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, புதியதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments