விழிப்புணர்வு பதிவு :நகைக்கடைகளில் உள்ள தங்க நகை சேமிப்பில் சூட்சமம் .. மக்களுக்கு உண்மையில் லாபமா?
நகைக்கடைகளில் உள்ள தங்க நகை சேமிப்புத் திட்டங்கள் (Gold Savings Schemes) இன்றைக்கு மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதில் நகைக்கடைகளில் சில சூட்சுமங்கள் இருக்கின்றன. தங்க நகை சேமிப்பை பொறுத்தவரை யார் லாபம் பெறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்தத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, மற்றும் அதில் உள்ள முக்கிய விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்தால் மட்டுமே நகை சேமிப்பு நமக்கு லாபமா, கடைக்காரருக்கு லாபமா என்பது தெரியும்.
தங்கம் விலை இன்று 92 ஆயிரம் ரூபாய்க்கு போய்விட்டது. விரைவில் ஒரு
சவரன் ஒரு லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்கூலி சேதாரம்
எல்லாம் சேர்த்தால் தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை
தாண்டியிருக்கும். இப்படியான சூழலில் தங்க நகை சேமிப்பு திட்டங்களில்
சேர்ந்து நிறைவு பெற போகிறவர்கள் ஓரளவு ஆனந்தமாக இருக்கிறார்கள்.
நகை சீட்டு போட்டவர்கள், எப்படி கட்ட போகிறோம். எப்படி தங்க நகை வாங்க
போகிறோம் என்று கவலையில் இருக்கிறார்கள். இதேபோல் தங்க நகை சீட்டு
போட்டாவது தங்கம் வாங்க வேண்டும் என்று இப்போது பலரும் ஆர்வமாக உள்ளார்கள்.
ஆனால் தங்க நகை சீட்டு என்பது சேமிப்பு திட்டமா அல்லது முதலீட்டு திட்டமா
என்பதை மக்கள் அறிய வேண்டும். தங்க நகை சீட்டு என்பது சேமிப்பு திட்டம்..
அது முதலீட்டு திட்டம் கிடையாது.. நகைக்கடைகள் நகை சேமிப்புத் திட்டங்களில்
சூட்சுமங்களை வைத்திருக்கின்றன.
தங்க நகை சேமிப்பு திட்டத்தின் சூட்சமங்கள்
தங்க நகை சேமிப்பு திட்டங்களின் அடிப்படைக் குறிக்கோள், தங்கத்தின்
விலையேற்றத்தில் இருந்து உங்களைப் பாதுகாப்பது அல்ல, மாறாக உங்களை ஒரு
உறுதியான வாடிக்கையாளராக மாற்றுவதுதான். தங்க நகை வாங்க நீங்கள் மாதாமாதம்
பணம் செலுத்துகிறீர்கள். முதிர்ச்சி அடையும் போது, நீங்கள் சேமித்த
பணத்திற்கு கிடைக்கும் மொத்த தங்கத்தின் அளவு (ஒவ்வொரு மாதமும் தங்கம்
கிராம் வடிவில் சேமிக்கப்படும்) அல்லது முதிர்ச்சி தேதியில் உள்ள தற்போதைய
சந்தை விலையின் அடிப்படையிலேயே கணக்கிடப்படும்.
எனினும் தங்க நகை சேமிப்பு திட்டம் என்பது உண்மையான 'சேமிப்பு'
கிடையாது. இது ஒரு முதலீட்டுத் திட்டம் அல்ல; இது ஒரு கட்டாய முன்பதிவு
திட்டம் மட்டுமே. நீங்கள் செலுத்தும் பணத்திற்கு எந்த வட்டியோ, இலாபமோ
கிடைக்காது. கடைசியில் செய்கூலி/சேதாரம் தள்ளுபடி மட்டுமே உங்களுக்குக்
கிடைக்கும் கூடுதல் நன்மையாக இருக்கும். சரி, நகைக்கடைகள்
செய்கூலி/சேதாரத்தில் சலுகை அளிப்பது ஏன்...நகைக்கடைகளில் நீங்கள் ஒரு
கட்டாய வாடிக்கையாளர், அவர்களுக்கு உங்களுக்கு பெரிய லாபங்கள் கிடைக்கும்.
எனவே அவர்கள் சலுகை அளிக்கிறார்கள்.
செய்கூலி/சேதாரம் தள்ளுபடி என்ற இந்தச் சலுகையை வழங்குவதன் மூலம், உங்கள்
பணம் வேறு கடைக்குச் செல்லாமல் உறுதியாக இவர்களிடமே நகை வாங்குவீர்கள்
என்பது உறுதியாகிவிட்டது. எனவே நீங்கள் முதிர்ச்சி அடைந்த பிறகு, கடைசியாக
நகை வாங்கும் போது, நகையின் மீது போடப்படும் செய்கூலியில் ஒரு பகுதியை
மட்டுமே நீங்கள் மிச்சப்படுத்தலாம்.
கடைகளுக்கு லாபம் அதிகம்
உண்மையில், இந்தத் திட்டத்தால் நகைக்கடைகளுக்குத்தான் மிக அதிகமான லாபம்
கிடைக்கும். ஒரு வருடச் சேமிப்புக்குப் பிறகு, நீங்கள் வேறு கடைக்குச்
செல்ல மாட்டீர்கள். நீங்கள் இந்தக் கடையில் மட்டுமே கட்டாயம் நகை
வாங்குவீர்கள். இது அவர்களுக்கு உறுதியான விற்பனை இருக்கும். இது தவிர
உங்களுக்கு தரப்பட்ட சலுகை தவிர மீதமுள்ள செய்கூலி மற்றும் சேதாரம் மூலம்
அவர்களுக்கு லாபம் தொடர்ந்து கிடைக்கும். இந்தத் திட்டம் ஒரு வருடம்
ஓடும்போது, உங்கள் பணம் அந்த நகைக்கடைக்கு வட்டி இல்லாத கடனாக கிடைக்கும்.
இந்தக் கடனைக் கொண்டு அவர்கள் மொத்தமாக தங்கத்தை வாங்கி சேமிக்கவோ, அல்லது
வியாபாரத்தில் முதலீடு செய்யவோ முடியும்
வாடிக்கையாளருக்கு லாபம் என்ன
நகை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மாதாமாதம் கட்டாயமாகச் சேமிக்க
இந்த திட்டம் உதவுகிறது. செய்கூலி மற்றும் சேதாரத்தில் கிடைக்கும் தள்ளுபடி
(ஒரு மாத தவணை போனஸ் அல்லது குறிப்பிட்ட சதவீத சலுகை) நேரடியாக
உங்களுக்குக் கிடைக்கும் பணப்பலன் ஆக பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கோ
அல்லது சுப நிகழ்ச்சிக்காகப் பணம் சேர்த்து, நகையை எளிதாக வாங்க முடியும்.
தங்க சேமிப்பு திட்டங்கள்
எனினும் இந்தத் திட்டங்கள் சேமிப்புக்காக நல்லது, முதலீட்டுக்காக அல்ல.
நீங்கள் நகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால், செய்கூலியில்
கிடைக்கும் சலுகைக்காக இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள்
தங்கத்தை முதலீடாகப் பார்க்கிறீர்கள் என்றால், செய்கூலி, சேதாரம் இல்லாத,
வருடாந்திர வட்டி கிடைக்கும் அரசு தங்கப் பத்திரங்கள் (SGB) அல்லது
டிஜிட்டல் தங்கம் போன்றவை அதிக லாபம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு
செய்வது நல்லது.
No comments