டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்.. எங்கு, எப்போது? முழு விவரம்:
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பெரும்பாலான பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதற்கு குரூப் வாரியாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இதற்காக தங்களை அவர்கள் தயார்ப்படுத்தியும் வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், பணிக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
2026ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. இதனால், டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு, விடையளிக்கும் விதமாக, மாதிரி தேர்வுகளுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 2, 2a, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. 2025 நவம்பர் 2ஆம் தேதி பயிற்சி கட்டணம் ஏதும் இல்லாமல் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், மற்றும் குடியிருப்பு முகவரிக்கான ஆதார நகலுடன் பயிற்சி வகுப்பிற்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கு, எப்போது நடக்கிறது?
சென்னை-1 பாரிமுனை 6/9, அக்ரஹாரம் சந்து(கச்சாலீஸ்வரர் ஆலயம்) அருகில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் அமைந்துள்ளது. 2025 நவம்பர் 2ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்பு நடைபெறும். தேர்வெழுத தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

No comments