Breaking News

வருமான வரி 'ரீஃபண்ட்' தொகை சிலருக்கு தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்?



இந்தியாவில் இந்தாண்டு 7.5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பதாக (income tax returns), வருமான வரித்துறை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பலரும் தங்களுக்கு இன்னும் ஐடி ரீஃபண்ட் (IT Refund) (கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறுதல்) தொகை கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். அதுபோல் உங்களுக்கு அந்த தொகை கிடைக்கவில்லையா? எதனால் இந்த காலதாமதம்? 

இந்த செயல் முறையில், நீங்கள் நிதியாண்டில் கூடுதலாக செலுத்திய வருமான வரியை திரும்பப் பெறலாம்.

டிடிஎஸ் (Tax Deducted at Source) அல்லது டிசிஎஸ் (Tax collected at source) அல்லது சுய மதிப்பீட்டு வரி போன்ற வகைகளில் நாம் செலுத்தும் கூடுதல் தொகைகளை வருமான வரித்துறை கணக்கிடும்.

வருமான வரி மதிப்பீட்டின் போது சமர்ப்பித்த கழிவுகள் மற்றும் விலக்குகள் அடிப்படையிலேயே வரி கணக்கிடப்படுகிறது.

இதுதொடர்பாக, தனிநபர் நிதி மேலாண்மை ஆலோசகரான கார்த்திகேயன் கூறுகையில், "ரீஃபண்ட் இல்லாதவர்களுக்கான செயல்முறைகள் தான் (processing) சீக்கிரமாக முடிந்துவிடும். அதன்பின், ரூ.50,000க்கும் கீழ் உள்ளவர்கள், பின் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் ரீஃபண்ட் உள்ளவர்களுக்கான செயல்முறைகள் ஆரம்பமாகும். ஏனெனில், ரீஃபண்ட் பெறுபவர்களில் அதிகமானோர் இந்த வரம்புக்குள் வந்துவிடுவார்கள். ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாக ரீஃபண்ட் பெறுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். பெரிய தொகையாக இருந்தால், அவர்கள் வழங்கிய தகவல்கள் சரியானவைதானா என கடுமையாக சோதிக்க வேண்டியிருப்பதால் காலதாமதமாகும்." என்றார்.

சிலருக்கு இந்த ரீஃபண்ட் உடனேயே கூட கிடைத்துவிடும். அது எப்படி?

"சரியான முறையில் கணக்கு தாக்கல் செய்து, முறையான தகவல்களை வழங்கியிருந்தால், உடனேயே அதற்கான நடைமுறைகள் முடிக்கப்பட்டு ரீஃபண்ட் ஆகிவிடும்," என்கிறார் கார்த்திகேயன்.

குறிப்பாக, சம்பளதாரர்களுக்கு விரைவிலேயே ரீஃபண்ட் ஆகிவிடும் என்கிறார் அவர். "ஏனெனில், நிறுவனங்கள் மூலம் ஏற்கெனவே முறையாக வரி செலுத்தப்பட்டிருக்கும். போதுமான தகவல்கள், தொடர்ச்சியான கண்காணிப்பு இருக்கும், முறைகேடுகள் ஏதும் இருக்காது என்பதால் சம்பளதாரர்களுக்கு விரைவாக ரீஃபண்ட் ஆகிவிடும்" என கூறினார்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகி வருவதும் இந்த கால தாமதத்திற்கு ஒரு காரணம் என்று கார்த்திகேயன் குறிப்பிடுகிறார்.

ஐ.டி. ரீஃபண்ட் தொகை கிடைக்க தாமதமாவது ஏன்?

இதற்கான முக்கிய காரணங்கள் சிலவற்றை கார்த்திகேயன் பட்டியலிட்டார்:

  • பழைய வருமான வரி ஏதேனும் நிலுவையில் இருந்து அதை செலுத்தாமல் இருந்தால் தாமதமாகும்.
  • வருமான வரி கணக்கை தவறான விண்ணப்பம் மூலம் தாக்கல் செய்தால் ரீஃபண்ட் கிடைக்காது. அதாவது, ஐடிஆர் 1-க்கு பதிலாக ஐடிஆர் 2 அல்லது வேறு ஏதேனும் விண்ணப்பம் மூலம் தாக்கல் செய்திருப்பார்கள். அவர்களுக்கு பணம் வராது, ஏனெனில் அவர்கள் சரியான முறையில் விண்ணப்பிக்கவில்லை.

ரீஃபண்ட் தாமதமாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Long terms capital gain (அதாவது, வீடு விற்றல் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றின் மூலம் வரும் லாபத்தைக் காட்ட வேண்டும்) லாபமோ, நஷ்டமோ ஒரு ரூபாயாக இருந்தாலும் அதை முறைப்படி கணக்கு காட்ட வேண்டும். எல்லாவற்றையும் கவனமாக பரிசோதித்து தாக்கல் செய்ய வேண்டும்.

ஏஐஎஸ் (AIS) தகவல்களை பரிசோதிக்க வேண்டும். இது, வரிதாரரரின் ஆண்டு வருமானம், பணப் பரிமாற்றம், வரித் தகவல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

அதேபோன்று, Taxpayer Information Summary (TIS) தகவல்களையும் சரியாக குறிப்பிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிதியாண்டுக்கான வரி செலுத்துவோர் பற்றிய முழுமையான தகவல்களை வழங்கும் ஒரு அறிக்கைதான் இது.

26 ஏ.எஸ்-ஐயும் பரிசோதிக்க வேண்டும். 26 ஏ.எஸ். என்பது பான் எண்ணுடன் தொடர்புடைய வருமான வரி சம்பந்தமான தகவல்கள்.

ஒட்டுமொத்தமாக, 26 ஏ.எஸ், டிஐஎஸ் (TIS)/ ஏஐஎஸ் (AIS) ஆகியவற்றுக்கும் நாம் வருமான வரி தாக்கல் செய்ததற்கும் இடையேயான தகவல் முரண்கள் தான் பெரும்பாலான தாமதங்களுக்குக் காரணம். எனவே, அதற்கான விண்ணப்பங்களில் சரியான தரவுகளை வழங்கினாலே, 90% சரியாக இருக்கும்.

சரியான, தற்போது பயன்படுத்தும் வங்கிக்கணக்கை கொடுக்க வேண்டும்.

வீட்டு வங்கிக்கடன் தொடர்பான தகவல்கள், 80C, 80D-யில் காப்பீடு சம்பந்தமான தகவல்களை வழங்க வேண்டும். அதுதொடர்பான எண்களை சரியாக வழங்க வேண்டும். இந்த தகவல்கள் பொருந்திப் போகவில்லையென்றாலும் தாமதமாக வாய்ப்புண்டு.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்த 30 தினங்களுக்குள் மின்னணு சரிபார்த்தலை (E-verification) செய்ய வேண்டும். அப்போதுதான் அதற்கான நடைமுறை முடிந்ததாக அர்த்தம். அதன் பிறகே, நீங்கள் கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறும் (ரீஃபண்ட்) செயல்முறை தொடங்கும்.

கவனிக்க வேண்டியது என்ன?

வருமான வரி கணக்கை சரியாக தாக்கல் செய்ய தமிழ்நாடு&புதுச்சேரி பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் செயலாளர் கே. ஜலபதி சில வழிமுறைகளை கூறினார். அதன்படி,

  • நன்கொடை, பள்ளிக் கட்டணம் ஆகியவற்றுக்கான தரவுகளை சரியாக கொடுக்க வேண்டும்.
  • ரீஃபண்ட் தொகை அசாதாரணமான வகையில் மிக அதிகமானதாக இருந்தாலும், அதை பரிசோதிக்க காலதாமதமாகும்.
  • அசாதாரணமான முறையில் வருமானம் அல்லது செலவுகள் கூடினாலோ அல்லது குறைந்தாலோ, லாபம் சரியாக காட்டப்படவில்லை என்றாலோ, அதனை சரிபார்த்த பின்னர் தான் வழங்குவார்கள்.
  • வங்கியில் அதிகமான இருப்பு இருந்து, வருமானம் மிக குறைவாக காட்டினாலும் சிக்கல்தான்.
  • நிதியாண்டில் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்திருந்தாலும் அதற்கேற்ப சோதித்து வழங்குவதில் தாமதமாகலாம்.

"பல பரிமாற்றங்கள் இல்லாதவர்கள் தாமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியும். ஆனால், நிறைய பரிமாற்றங்கள் செய்தவர்கள், அதிக தொகையை ரீஃபண்டாக கோருபவர்கள் அதற்கென தொழில் ரீதியாக அமையப்பெற்ற நிபுணர்களின் உதவியை நாடலாம்." என்றார் கே.ஜலபதி.

எப்போது ரீஃபண்ட் ஆகும்?

"விரைவிலேயே ரீஃபண்ட் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 90 நாட்களுக்குள் ரீஃபண்ட் செய்வோம் என அரசு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் சரியாக நாம் தாக்கல் செய்யாவிட்டால் தாமதமாக வாய்ப்புண்டு." என்கிறார் கார்த்திகேயன்.

"எந்தவொரு நிலுவையும் இல்லாமல் (outstanding demand) இருந்து, சரியாக விண்ணப்பித்திருந்தால், 90 நாட்களுக்குள் வந்துவிடும். எனினும், எத்தனை நாட்களுக்குள் ரீஃபண்ட் தர வேண்டும் என்பதற்கு விதி இல்லை." என்கிறார் அவர்.

ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில், வருமான வரி தாக்கல் இணையதளத்தில் லாக்-இன் செய்து பார்க்க வேண்டும், எந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறோமோ அதை சரியாக கவனிக்க வேண்டும். தகவல்கள் முரணாக உள்ளதாகவோ, அல்லது போதவில்லை என மின்னஞ்சல் வந்திருந்தாலோ அதற்கேற்ப தகவல்களை வழங்க வேண்டும்.

eFiling இணையதளத்தில் ரீஃபண்ட் செயல்முறை ஸ்டேட்டஸை நீங்கள் சரிபார்க்கலாம்.

தாமதமானால் வட்டியுடன் சேர்த்து தரப்படுமா?

"90 நாட்களுக்கு மேலும் ரீஃபண்ட் ஆகாவிட்டால், அதற்கு வட்டி சேர்த்து கொடுக்கப்படும்

No comments